"தெரியவில்லையா! காற்றும் ஒளியும் கிடைக்கிறது! இருக்க இடம் தரவில்லை தாயகம்! உழுது பயிரிட வயல் இல்லை. ஒண்டக் குடிசை இல்லை."
ஆமாம்! ஒண்டக் குடிசையும்தான் இல்லை.
வீர இளைஞன், விழியிலே கனிவுடன் காட்சிதரும் இலட்சியவாதி, பெருந்திரளான மக்களைப் பார்த்துக் கேட்கிறான். அவனுடைய கேள்விகள் அந்த மக்கள் மனத்திலே தூங்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களைத் தட்டி எழுப்புகின்றன.
இதே கேள்விகள், அவர்கள் மனத்திலே ஆயிரம் முறை எழும்பின - அடங்கின! மாளிகைகளைக் காணும் போதெல்லாம் இந்தக் கேள்விகள், மனத்தைக் குடைந்தன! பசும் வயல்களிலே முற்றிக் கிடக்கும் கதிர்களை அறுவடை செய்தபோதும், பழமுதிர் சோலைகளிலே பாடுபட்டபோதும், பாதை ஓரத்தில் நின்று பட்டுடைக்காரருக்கு மரியாதை செய்தபோதும், அவர்கள் மனத்திலே இந்தக் கேள்விகள் எழுந்தன!